ஒருவருக்கு காரியத் தடை, முன்னேற்றத் தடை ஏற்படுவதற்கு ஜோதிடரீதியாக பல தோஷங்கள் இருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லும்படியான தோஷம் புனர்பூ தோஷமாகும்.
ஒரு ஜாதகத்தில் சனி, சந்திரன் சம்பந்தம் இருந்தால் உருவாகும் கடுமையான- கருணையற்ற தோஷம் இதுவாகும். சனியும் சந்திரனும் தொடர்புள்ள நேரத்தில் எந்த வொரு செயலைச் செய்தாலும், அது மிகப் பெரிய தடை, காலதாமதத்தை ஏற்படுத்தும்.
புனர்பூ தோஷத்திற்கான கிரக அமைப்புகள் 1. சனியும் சந்திரனும் ஒரே ராசியில் இருப்பது.
2. சனி, சந்திரன் பரிவர்த்தனை.
மகரம், கும்ப ராசியில் சந்திரன் இருப்பது, கடக ராசியில் சனி இருப்பது.
3. சனி, சந்திரன் ஒருவரையொருவர் சமசப்தமமாகப் பார்த்துக்கொள்வது.
4. சனி, சந்திரன் சாரப் பரிவர்த்தனை.
சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவற்றில் சந்திரன் நிற்பது, சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகியவற்றில் சனி நிற்பது.
5. நவாம்சத்தில் சனி பகவானும், சந்திர பகவானும் ஒன்றாக சேர்ந்துநிற்பது ஆகிய அமைப்புகள் புனர்பூ தோஷமாகும்.
இதில் சனி, சந்திரன் சேர்க்கை, சமசப்தமப் பார்வை முதல்தர புனர்பூ தோஷமாகும். அத்துடன் சனி அல்லது சந்திரன் நீசமாகி இருந்தால் அதிபயங்கர புனர்பூ அமைப் பாகும். நன்மையானாலும் தீமையானாலும் இரட்டிப்பான பலன்களைத் தரும்.
‘புனர்பூ’ என்றால் அதீத தடை, தாமதம் எனப் பொருள். ஜாதகரின் அனைத்து செயல்களிலும் தடை, தாமதம் ஏற்படும். சனி, சந்திரனுடன் சேரும், பார்க்கும் கிரகங்களின் ஆதிபத்தியம், காரகத்துவம், சாரம், பரிவர்த்தனைக்கேற்ப செயல்பாடுகளின் தன்மை இருக்கும்.
சனியை ஆயுள்காரகன், கர்மகாரகன், மந்தன் எனக் கூறுவார்கள். மந்தன் என்றால் மிகமிக மெதுவாக வலம்வருபவர் எனப் பொருள். சனி ஒரு ராசியைக் கடக்க 21/2 ஆண்டுகள் ஆகும். ராசி மண்டலத்தை முழுமை யாகக் கடக்க 30 ஆண்டுகளாகும். சனி ஒருமுறை கடந்து முடியும்போது வாழ்க்கை யில் திடீர் திருப்பங்கள், ஏற்ற இறக்கங்கள் நிகழும். கடின உழைப்பு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நீதி, நேர்மை, நியாயம், தர்மம் போன்றவற்றைக் கற்றுக் கொடுப்பவர்.
அவரவரின் 9-ஆம் பாவக வலிமைக்கேற்ப சனியின் செயல்பாடுகள் இருக்கும். சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவர். ஒருவருக்கு எந்தவிதமான கஷ்ட, நஷ்டங்கள் வந்தாலும் முதலில் பாதிப்பது மனம்தான்.
அமைதியின்மை, கோபம், பிடிவாதம், சோகம், இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் போன்ற மனநிலை பாதிப்பு ஏற்படும். ஒரு தெளிவான சிந்தனை, முடிவெடுப்பதற்குக் காரணமாக விளங்குபவர் சந்திரன். சனிக்கும் சந்திரனுக்கும் பலவகைகளில் ஒத்துப்போகாததன்மைகள் உண்டு. சந்திரன் தினக்கோள். 27 நட்சத் திரங்களை மிக அதிவேகமாகப் பயணித்து, 30 நாட்களில் ராசி மண்டலத்தைக் கடக்கிறது. சனியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நேரெதிர் மாற்றமாக இருக்கும். சந்திரன் ராசிமண்டலத்தைச் சுற்றிவர 30 நாட்கள், சனி ராசி மண்டலத்தைச் சுற்றி வர 30 வருடங்கள். சனி மந்தம், சந்திரன் வேகம். சனி இருள், சந்திரன் ஒளி.
இப்படி எல்லாமே எதிரும்புதிருமாக அமைந்துள்ள தால், சனியும் சந்திரனும் ஜாதகக் கட்டத்தில் எந்த வகையிலாவது சம்பந்தம் பெற்றால் புனர்பூ தோஷம் செயல்படும். ஒருசிலருக்கு கோட்சார ரீதியாக குறுகியகால பாதிப்பு இருக்கும்.
புனர்பூ அமைப்பு இருப்பவர்களுக்கு தூக்கமின்மை இருக்கும். மற்றவரின் குறைகளைக் கண்டறிந்து அதைப் பெரிதுபடுத்துவதில் வல்லவர்களாகவும் இருப்பதுடன், ஒருவரைப் பார்த்தவுடன் அவரின் குணநலன்களைத் துல்லிய மாகக் கணித்துவிடும் தன்மையு டையவர்கள். இந்த தோஷமானது எப்போதுமே ஆழ்மனதில் ஓர் இனம்புரியாத சோகத்தை வைத் திருப்பதுடன், சின்னச்சின்ன விஷயங்களில்கூட பய உணர்வைத் தரும். மேலும், கோட்சாரத்திலோ, தசாபுக்தியிலோ சனி- சந்திரன் தொடர்பு ஏற்படும்போது இனம் புரியாத கவலைகள் மற்றும் துக்கங் களைத் தரும். மனசஞ்சலத்தின் உச்சகட்ட சேர்க்கை இந்த புனர்பூ அமைப்பு.
மேலும், புனர்பூ அமைப்பு இருப்பவர்களுக்கு திருமணத் திற்குமுன்பு ஏற்படும் பிரச் சினைகள்:
1. காலதாமதத் திருமணம்.
2. நிச்சயித்த திருமணம் நின்று போவது.
3. நிச்சயிக்கப்பட்ட திருமணத் தேதி, திருமண மண்டபம் மாறுவது.
4. மணப்பெண்ணோ, மாப் பிள்ளையோ மாறிப்போவது.
5. தாலி கட்டும் நேரத்தில் இரு வீட்டாருக்கும் சண்டை, சச்சரவு ஏற்படுவது.
திருமணத்திற்குப் பிறகு இல்லற இன்பத்தைக் கெடுத்து விவகாரத்து, மறுமணம் போன்ற பிரச்சினைகளைத் தரும். சிலருக்கு இல்லற துறவறத்தையும், ஒருசிலருக்கு சந்நியாச யோகத்தையும் தந்து விடும். இல்வாழ்வில் பற்றற்ற நிலையை ஏற்படுத்தும். மிகக் கடுமையாக இருந்தால் பிரம்மச் சாரி வாழ்க்கையைக்கூட வாழ வைத்துவிடும்.
கர்மக்காரகரான சனி, நாள் கிரகமான சந்திரனுடன் சேரும்போது கர்மச்செயல்படுகளின் தன்மையில் அதிவேக மாற்றமும், தனித்தன்மையும் ஏற்படும். சிற்றின்பம் சனி; பேரின்பம் சந்திரன். இருவரும் சம்பந்தம் இல்லாதவர்கள் இல்லற சிற்றின்பத்தை அனுபவித்து கர்மவினையில் உழல்வார்கள். கர்மகாரகன் சனி பகவான் சந்திரனுடன் சம்பந்தப்படுபவர்களை, அவரவர் கர்மவினைக்கேற்ப பக்குவப்படுத்தி, ஞானமார்க்கப் பாதையில் கொண்டு விட்டுவிடுவார்.
ஒருசிலர் இல்லறத்தில் இருந்துகொண்டே பக்தி மார்க்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். இல்லற வாழ்க்கையில் இருக்கும்போது பலவிதமான எண்ணங்கள் அலைமோதும். முடிவுசெய்ய முடியாமல் திணறுவார்கள். துறவறத்திற்குச் சென்றபிறகு அவர்கள் முடிவு தீர்க்கமாக இருக்கும். பல்வேறு மகான்கள், அவதார புருஷர் களின் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கும்.
உதாரணம் ராமர் ஜாதகம். மகாபாக்கிய வான்கள், பூர்வபுண்ணியம் மிகுதியாக இருக்கப் பிறந்தவர்கள் ஆகியோருக்கு பற்றற்ற நிலை ஏற்பட்டு, வாழ்வில் ஒரு குறிப்பிட்ட நோக்கோடு பயணித்தும், தனித்தன்மையான கொள்கைப்பிடிப்போடு இருந்து புகழின் உச்சத்தைத் தொட்டுவிடு வார்கள். அதாவது புனர்பூ என்பது இப்பிறவியில் கழிக்கவேண்டிய சஞ்சித கர்மாவாகும். விட்டுப்போன கர்மவினையை இப்பிறவியிலேயே நடத்திவிடும். ஆசைகளைக் குறைக்கும்போது புனர்பூ தோஷம் வலிமை இழக்கும்.
விதிவிலக்காக லக்ன சுபர், குருவின் பார்வை சனி, சந்திரனுக்குக் கிடைத்தாலோ, சனி, சந்திர தசை வராமல் இருந்தாலோ பாதிப்பு குறைவாக இருக்கும். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு, எல்லாமே எதிர்பாராத விதமாகக் கூடிவரும். எதிர்பாராத விதமாக எல்லாமே நடக்கும்.
பரிகாரம்
புண்ணிய நதிகளில் புனித நீராடல் வேண்டும்.
திருப்பதி வேங்கடாசலபதி தரிசனம் நல்ல பலன் தரும்.
பௌர்ணமி நாளில் விரதமிருந்து சத்திய நாராயணர் வழிபாடுசெய்ய வேண்டும்.
மனநலம் குன்றியவர்கள் ,உடல் ஊனமுற்றவர்கள், விதவைகள், ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் இல்லங்களுக்கு உணவு, உடை தானம் செய்யலாம்.
ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணம், படிப்புச் செலவுக்கு உதவலாம்.
பிரதோஷப் பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனிப் பிரதோஷ வழிபாடு செய்வது மிகச்சிறப்பு. பிரதோஷ காலத்தில் சிவபெரு மானுக்கு வில்வ அர்ச்சனை செய்ய வேண்டும். வன்னி மர இலைகளை சிவபெருமானுக்கு சனிக்கிழமைதோறும் சாற்றி வணங்கி வழிபடலாம். வன்னிமரத்தைச் சுற்றிவந்து வணங்கவேண்டும்.
தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய்யில் தீபமேற்றி வழிபடவும்.
கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்துவரலாம்.
சனிக்கிழமை அசைவ உணவைத் தவிர்க்கவேண்டும்.
விநாயகர், அனுமன் வழிபாடு சிறப்பான பலன் தரும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளை, தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வணங்கவேண்டும்.
தினமும் ராமநாமம் பாராயணம் செய்ய வேண்டும் அல்லது ஸ்ரீராம ஜெயம் எழுதலாம்.
இத்துடன் உளவியல்ரீதியான பரிகார மாக- தேவையில்லாமல் சந்தேகப்படக் கூடாது. உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
திருமணம் நிச்சயமானபிறகு ஆண், பெண் இருவரும் 10-ஆவது கிரகமான செல்போனைப் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையைக் கெடுக்கக்கூடாது.
செல்: 98652 20406